Sunday, March 8, 2026

குறும்பா-கட்டுரைகள்

 

குறும்பா

செங்கதிரோன்

‘’......................குறும்பா வரலாற்றில்  மறக்க முடியாதவர் கவிஞர். தீரன். ஆர்.எம். நௌஷாத். இவர் நடத்திய  தூது கவிதைச் சஞ்சிகையில்  ஆசிரியர் தலையங்கங்களைக் கூட குறும்பா வடிவில்  எழுதினார்.  தீரன் நோஷாத் பற்றி  இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய  இன்னுமொரு விடயம்  அவர் இயல்பாகவே  நகைச்சுவை உணர்வுமிக்கவர்.  கவிஞர் மக்காகவியைப் போலவே  எதையும் நகைச்சுவையாகப்  பார்க்கும் தன்மையினால்  குறும்பாவை  அதன் வடிவில்  நகைச்சுவை உணர்வு மேலோங்க  எழுதியவர்.  இன்றும் கூட  குறும்பா எழுதி  வருகின்றார்..  தனது முகநூல் பக்கத்தில்,  அவர் எழுதிய குறும்பா இது.

ஆடம்பரமாய் நடக்குதுபல     இப்தார்

அத்தனைக்கும் போன நம்ம     சத்தார்

அடுக்கடுக்காய்ப் படம்பிடித்து

அத்தனையும் முகநூலில்

அடுத்தடுத்துப் பதிவேற்றிச்     செத்தார்.

(12.06.2018)

௦௦௦௦௦௦  

 

 

குறும்பா

 

குறும்பா என்றால் என்ன? அதன் ஆக்க வடிவங்கள் என்னென்ன.. அதன் பொருள்கோடல் யாது... என்றெல்லாம் ஆராயப் போனால் அது மிகவும் பரந்துபட்ட ஒரு தேடலுக்கு நம்மை இட்டுச் செல்லும்..  எனவே அதன் விரிவான விளக்கத்தை விடுத்து,  குறும்பா வடிவத்தினதும் அதன்  தோற்றப்ப்பாட்டினதும் ஒரு சுருக்க வெட்டுமுகப் பார்வையை மட்டும் அலசிப் பார்ப்போம்.

 

 

குறும்பா என்னும் கவிதை வடிவத்தை தமிழில் அறிமுகப்படுத்தியவர் மஹாகவி என்னும் புனைப் பெயரை கொண்ட து.உருத்திர மூர்த்தி ஆவார்.கவிதைகள் நாடகங்கள் காவியங்கள் படைத்துள்ள மஹாகவி, இலங்கையின் நவீன கவிதை வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை ஆற்றிய கவிஞர் ஆவார்

 

 

ஆங்கில இலக்கியத்தில் உள்ள லிமரிக் (limerick ) என்னும் கவிதை வடிவத்தை தழுவியே மஹாகவி குறும்பாக்களை உருவாக்கினார். லிமரிக் நகைச்சுவைக்கென உருவான தனி வடிவமாகும். குறிப்பிட்ட யாப்பு விதிகளுக்கு அமைய உருவான ஐந்தடிக் கவிதையாக இது அமைகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோற்றம் பெற்ற இவ்வடிவம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எட்வேர்ட் லியர் என்பவரால் பிரபல்ய படுத்தப்பட்ட பிறகு ஆங்கில இலக்கியத்தில் தனி இடத்தைப் பிடித்துக் கொண்டது.

 

 

லிமரிக் எந்த விடயத்தைப் பற்றியும் நகைச்சுவையோடு கேலி செய்யும். சமூகத்தின் அர்த்தமற்ற சடங்குகள் அசிங்கமான பழக்கவழக்கங்கள் அறிவுக்குப் பொருந்தாத விடயங்கள் அனைத்தையும் லிமரிக் கேலி செய்யும்.

 

 

லிமரிக் என்பதற்கு மஹாகவி சூட்டிய பெயர் குறும்பா. இது உருவம் உள்ளடக்கம் இரண்டையும் குறிக்கும் பொருத்தமான பெயர் என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

 

குறும்பா உருவத்தில் குறுகியது: எனவே குறும்-பா. எனப்பட்டது.  உள்ளடக்கத்தில் குறும்புத்தனத்தை கொண்டது. அதனால் அது குறும்பு-பா ...

மஹாகவி லிமரிக்கைத் தழுவியே தமிழுக்கு ஏற்ற சில மாற்றங்களுடன் குறும்பா வின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் அமைத்தார்.

சமூகத்தின் சீர்கேடுகள் அசிங்கமான பழக்க வழக்கங்களை தமது குறும்பாக்களில் கேலி செய்தார்.

 

பொதுவாக குறும்பாக்கள் சமுகத்தின் அர்த்தமற்ற சில போலியான சடங்கு சம்பிரதாயங்களை கேலியும் கிண்டலுமான தொனியில் கண்டனம் செய்கிறது..  எனினும் சிற்சில போதுகளில் மிகச் சீரியசான  தன்மையுடனும் சீறிப் பாயும் தன்மையும் கொண்டது இக்குறும்பாக்கள்.

 

1966இல் ' மஹாகவியின் குறும்பா' என்னும் தொகுதியை வெளியிட்டார். ஒவ்வொரு குறும்பாவும் பொருத்தமான கேலிச்சித்திரத்துடன் அமைந்திருந்து...

 

இவருக்குப் பின் இக் குறும்பா வடிவத்தைக் கையாண்டவர்கள் மிகக் குறைவே, கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது சேர் அவர்களும் மகாகவிக்குப் பின் குறும்பா எழுதிய முதலாமவர் ஆவார்.  ஈழத்தில் கொக்கூர்கிளான் கா.வை. இரத்தினசிங்கம்-எஸ்.பொ. சில்லையூர் செல்வராஜன், ஜவாத் மரைக்கார்,  எம்.எம். ஷம்ஸ், கவிஞர் அல் அசோமத்,பாலமுனை பாறூக், காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்  என்போர்   கணிசமான அளவில் குறும்பா எழுதியிருக்கிறனர்.

 

1 9 7 7 களில் வெளியான அல் அசொமத்தின் பூபாளம் கவிதைச் சஞ்சிகை ‘’தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை’’ என்ற ஈற்றடியை வைத்து ஒரு குறும்பா போட்டியை நடத்தியிருந்தது.

 

பின்னர் வந்த காலங்களில்,  தீரன், சி.சிவசேகரன், அலக்ஸ் பரந்தாமன்  ஒலுவில் ஜலால்தீன், ஒலுவில் வஹாப்தீன் ,மருதூர் ஜமால்தீன்,  போன்ற பலரும் குறும்பா எழுதுவதில் அதிக நாட்டம் காட்டி ஏராளமாக எழுதிக் கொண்டுமிருந்தனர், குறும்பா தொகுதிகளும் வெளியிட்டும் இருந்தனர்.  என்னுடைய குறும்பா தொகுதி குறு-நெல் என்பதாகும். 1 9 ௮ 3 களில் நான் வெளியிட்ட தூது கவிஎட்டின், ஆசிரிய தலையங்கங்களை குறும்பா வடிவிலேயே எழுதியிரு ந்தேன்.

 

மேற்படி விடயங்களை ஒரு தகவலுக்காக  சொல்லிக் கொண்டு, இக்குறும்பா ஆக்கும் அடிப்படை இலக்கணக் கட்டமைப்பு பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

 

குறும்பாவின் இலக்கண  நுட்பங்களை புரிந்து கொள்வதற்கு தமிழ் மொழியில் பாவிக்கப்படும், காய்ச்சீர், கனிச்சீர், தேமா, புளிமா எனப்படும் அடிப்படை விடயங்கள் பற்றிய போதுமான அறிவு பயில வேண்டும். இதுமிக விசாலமான பரப்பைக் கொண்டது.

 

நான் இங்கே எனக்குத் தரப்பட்ட குறுகிய கால அவகாசத்தில் மேலோட்டமான முறையில் சில நுட்பங்களையும் கட்டமைப்புக்களையும் மட்டுமே சொல்ல  இருக்கிறேன்.

 

ஒரு குறும்பாவானது,

காய் - காய் - தேமா

காய் - காய் தேமா

காய் - காய்

காய் - காய்

காய் - காய் – தேமா

 

என்னும் வாய்ப்பாட்டில் அமையும்.   

உதாரணமாக ஒரு குறும்பாவை எடுத்துக் கொள்வோம்

 

மூத்தப்பா  குறைத்திட்டார் தீனி

முடிவெடுத்தார் தன்னுடைய காணி

பத்தேக்கர் முழுவதையும்

பகிர்ந்தளிக்க மக்களுக்கு

ரத்தத்தில் ஐநூறாம் சீனி.

 

இக்குறும்பாவில், முதல் வரியில்,  இரண்டு காய்ச் சீர் வருகின்றன..அவை   ஒவ்வோர் அடியும் மும்மூன்று அசையை கொண்டுள்ளது.

மூத்—தப்---பா.....என்பது ஒரு காய்.

குறைத் ---திட்---டார்  என்பது ஒரு காய்

இரண்டு காய்கள் வந்து விட்டன.. பக்கத்தில் ஒரு தேமா வரவேண்டும்... அது, தீனி என்ற  சொல் ஆகும்.

 

இக்குறும்பாவில் இரண்டாவது அடியைப் பாருங்கள்...

 

முடி---வெடுத்---தார் /  தன்----னுடை----ய

 

இதில் இரண்டு காய் என முடியும் சீர்கள் உள்ளன... அடுத்து ஒரு  தேமா வரல் வேண்டும்.. அது, காணி என வருகிறது.

 

அதன் பின், மூன்றாம் நான்காம் வரிகளும் இரண்டிரண்டு காய்ச்சீரில் முடியும் சொற்கள் ஆகும்..  பாருங்கள்..

 

பத்---தேக்---கர்  / முழு—வதை--யும்

பகிர்ந்---தளிக்---க /   மக்---களுக்---கு

 

இதன் பின், இறுதி ஐந்தாவது அடி...அதுவும் அவ்வாறே இருக்கும்

 

ரத்—தத்—தில்/   ஐ—நூ—றாம்.      இதற்கான தேமா  சீனி. என முடிகிறது.

 

 

இன்னொரு குறும்பா சொல்கிறேன் கேளுங்கள்...

 

போக்கறுந்து போனஒரு விடலை

பின்னிரவு வரைபோட்டான் கடலை

"ஏக்கமெனை வாட்டுதென

என்னிதயம் வேகுதென"

நோக்கம்பசி  யாறலவள் உடலை.

*

மற்றுமொரு குறும்பா

தினந்தோறும் குடிப்பவன்தான் முத்து

சினமேறத் தினம்பிடிக்கும் பித்து

ராத்திரியில் வருபவனை

ராசாத்தி அவன்மனைவி

சினத்தோடு கேட்கவிழும் குத்து,

 

இவற்றில் உள்ள சீர்களையும், தேமாக்களையும் நன்கு கவனித்தால் ஓரளவுக்கு குரும்பாவின்  முதல் படியை தாண்டி விடலாம்.  மேலும், இதில் கவனிக்க வேண்டிய  மற்றும் கனிச்சீர்  எதுகை போன்ற விடயங்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்... குறும்பாவை குறும்பாக எழுதுவதிலும் தேர்ச்சி பெறல் வேண்டும்.

 

0000000000000000000000000000000000000000000000000000000000000

 

 

ஈழத்தில்  குறும்பாவின் தோற்றமும்  வளர்ச்சியும்.

பேராசிரியர் செ. யோகராசா

 

‘’...........எண்பதுகளளவிலே குறும்பா எழுதியவர்கள் தீரன்.ஆர்.எம். நௌஷாத், கொக்கூர்கிளான்.கா.வை. இரத்தினசிங்கம்  ஆகியோர்  முக்கியம் பெறுகின்றனர்.. தீரன்.ஆர்.எம். நோவ்ஷாத்தும்,  அழ.அசூமத் போன்று (கவிதைச்)சஞ்சிகை ஒன்று (தூது) நடத்தியவர். ஆசிரியத் தலையங்கங்களைக் கூட சில சந்தர்ப்பங்களில்  குறும்பா வடிவத்தினூடாக  எழுதியவர்.  இதனால்,  தொடர் குறும்பாக்களும்  வெளிவந்தன.  இச்சஞ்சிகை  வெளிவந்த காலம்  பேரினவாத ஒடுக்குமுறையின்  உச்சங்களும்,  ஆயுதப் போராட்டங்களும்  நிகழ்ந்த காலமாதலின்  அவை பற்றிய  குறும்பாக்கள்  அதிகளவில் இயற்றியவர்... .ம்.

பரிமாற்றம் -ஆசிரியர்த தலையங்கம்)

தினந்தோறும் துப்பாக்கிச் சத்தம்

தீநரகில் மானுடங்கள் தத்தம்

தீய்ந்துவிடும் உயிருடமை

திரும்பாதா சமாதானம்

தீராதா உளநாட்டு யுத்தம்?

 

ஓற்றுமையாயப் பேச்சொலிக்கும் காலை

ஒருகுண்டு வெடித்திடுமோர் மூலை

ஒப்பமிட்டோர் ஓடியொழிய

ஒருகணத்தில் குழம்பிவிடும்

ஓலமிட்டழும் மனமெல்லாம் பாலை

(தூது-1 0 – 1 9 8 6  யூன்)

தீரன் தொடர்ந்து எழுதி வருவதனால் ‘’குறும்பாக சில குறும்பாக்கள்’’  என்ற தலைப்பில்  சமகால விடயங்களும் அவரால் எழுதப்படுகின்றன.. உ-ம்.

கிறிஸ்மேன்

எங்கிலுமே கிறீஸ்மேன்தான்  பேச்சு

எல்லோரும் வீடடங்க   லாச்சு

எத்தனிவன்  ஏகலைவன்

ஏறிக் கூரை பிரித்து

எடுத்துச் சென்றான்  கோழி போச்சு

(நீங்களும் எழுதலாம்-மே-ஒக்- 2 0 1 1 )

இக்காலப் பகுதியில்  கொக்கூர்கிளான் கா.வை. இரத்தினசிங்கமும்  குறும்பாக்கள் எழுதியிருப்பதாகவும்  அவரது தொகுப்புகளில் அவை இருப்பதாகவும்  தீரன் தகவல் தந்திருப்பினும்  தொகுப்புக்கள் கிடையாத நிலையில்  கொக்கூர்கிளான்,  தீரனுக்கு  எழுதிய கடிதக் குரும்பாக்களுள் ஒன்று  இவ்வேளை தரப்படுகிறது

ஆசிரியர் புலவர்மணி    என்றன்

அகத்ற்றதில் அமர்ந்திருக்கும்   அன்பன்

பாண்டியூரன், ஆ.சாவும்

அன்புமுகை தீனுமற்ற

யாபேரும் நண்பர்களே    என்பன்

(23.04.1983)

(கொக்கூர்கிளான் யாப்பியல் நூலொன்றும் எழுதியுள்ளாராம்.) பீர்முகம்மதுவும்,  இக்காலப்பகுதியில்  குறும்பா எழுதியிருப்பினும்  (தகவல்: தீரன்) அன்னார்  பிற்காலத்திலெழுதிய தொடர் குறும்பாவே  பார்வைக்குக் கிட்டியுள்ளது.

(ஜீவநதி- கவிதைச் சிறப்பிதழ்- –மார்கழி- 2014)

 

No comments:

Post a Comment