Sunday, March 8, 2026

தீரனின் குறும்பாக்கள்

 

குறுநெல் நூலில் உள்ள 62 குறும்பாக்களும்

மேலும்  சிலவும்..

௦௦

 

01. கருணை

காவி மொட்டை பஸ் ஒன்றில்    ஏறி

கடிந்தார் நான் குரு என்று      கூறி

குருமாருக்கு மட்டுமதில்

குந்தி வந்த முடவனெழ

கருணை அமர்ந்தார் தம்மம்     மீறி.

0

02. துர்-அதிர்ஷ்டம்

விழுமென்றே நம்பியொரு கோடி

விழுந்தெடுத்தார் லொத்தரைத்தான் நாடி

விழவில்லை ஒருநாளும்

விழாதென்று கிழித்து வீசி

விட்டடெறிந்ததில் இருந்ததிரு கோடி

0

03. ஒரு(க்)கால்

சீற்றின் கீழ் தன்கால்   விட்டார்

சீற்றின் முன் பெண்கால் தொட்டார்

சோக்காகத்  தடவிவிட்டார்

சேருமிடம் வந்தபின்னே            

செயற்கைக்கால்- மிரண்டு விட்டார்.

04. மறி-யல்

விற்க வந்தாள் ஒரு சிறுமி     பிட்டு

வந்தவளைத் தனியறைக்குள்   விட்டு

வளர்த்தாட்டி விளையாடி

வம்புசெய்தார் கிழட்டப்பா

விளக்கமறியலில்; கிழவன்     மாட்டு.

0

05. ஓசி

எத்தனையோ புத்தகங்கள்   போட்டேன்

எவர்தலை கட்டி காசு      சேர்த்தேன்

எவரேனும் நூலொன்று

எழுதியுள்ளேன் எடுங்களென்றால்

என்பணமீந்து வாங்க    மாட்டேன்.

06. ..வேஷம்

தாடிஜிப்பா தலைப்பாகை     தொப்பி

ஆடையெல்லாம் அத்தர்     அப்பி

தங்கியிருந்தார் பள்ளித்

தொண்டு; செய்தொரு நாள்

உண்டியலுடன் போனது ஆள் தப்பி

0

07.  இணை-யம்

பிள்ளைக்குப் படிக்க இன்டர்    நெட்டு

பூட்டினர் கொம்பியுற்றர் கடன்   பட்டு

பேஸ்புக்கில் சட்டடித்து

பாஸ்போட்டும் முடித்தெடுத்து

பறந்தாள் பெற்றோரைக் கை   விட்டு.

0

08. கிறீஸ்மேன்

எங்கிலுமே கிறீஸ்மேன்தான்   பேச்சு

எல்லோரும் வீடடங்க        ளாச்சு

எத்தனிவன் ஏகலைவன்

ஏறிக் கூரைபிரித்து

எடுத்துச் சென்றான் கோழி   போச்சு

0

09.  தொண்டு

சுனாமியினால் விழுந்தசவம்    கண்டார்

செய்ய வந்தார் புனிதமிகு     தொண்டார்

சவக்குழிகள் தோண்டியவர்

சவம் புதைக்கும் போதந்தச்

செவி கழுத்து நகையுருவிக்   கொண்டார்.

0

10.  குறுஞ்செய்-தீ

எஸ்எம்எஸ் அனுப்புகிறாள்    பாட்டி

எட்டிப் பார்த்தான் பேரன்     சூட்டி

எதிர்வீட்டுக் கிழவருக்காம்

எத்திவைத்தான் பாட்டனிடம்

எழுபது வயதில் மணவிலக்கு    நோட்டீஸ்.

0

13. விஞ்ஞானக் கண்ணி

 விழி வீசினாயே விஞ்ஞானக்  கண்ணி

வெடிவைத் தழித்தாயுன்   கண்ணில்

விழியீர்ப்பு விசையில் நான்

விழுந்தேன் மின் வலையில்

வழியின்றி அழிந்தேன் இம்   மண்ணில்

0

14. மெம்பர்

கிணற்றுத் தவளையவர்       துள்ளி

கணக்கின்றி செலவழித்தார்    அள்ளி

காசுபணம்.. ஆயினுமவர்க்கு

கிடைத்தது ஏழு வோட்டு

கந்தறுந்து போய்ப்படுத்தார்    எள்ளி

0

15. அன்பு அளிப்பு

அமைச்சில் செயலாளர்   உள்ளார்

அகடம் செய்வதில்   வல்லார்

அவருக்கு அன்பளிப்பு

அகலமான என்வலப்பு

அளித்தால் எக்காரியமும் வெல்வார்.

0

16.  புண்ணியப் பயணம்.

புரட்டிப் பணம் சேர்த்து   வெச்சு

புண்ணியம். புறப்பட்டார்   ஹஜ்ஜ-

பணமிருந்தால் ஹாஜியாராம்

பிணமானால் நேரே சொர்க்கமாம்

பத்துக்குமர் பக்கத்து வீடோ  குச்சு.

0

17.  ஏகமும் நானே

தமிழரின் ஏகதலைவன்      நானே

தரணியெலாம் தனிஆளாய்   தானே

தமிழரசு ஆள்வேனென்று

தலைக்கணம் தழைத்ததால்

தமிழீழப்போர் போனது     வீணே.

0

18.  பாடு-பட்டு.

கனடாவாழ் காதலருக்கும்    பாட்டு

கண்டறியா நேயருக்கும்     கேட்டு

கலகலவென கதைத்திருப்பார்

கலையுலக நண்பர்களாம்

காசுகரையுது கடனுக்கு ரீ   லோட்டு.

0

19. எம்பி எம்பி

தேர்தலில் குதித்தார்       எம்பி

தேனொழுகப் பேசினார்     தம்பி

தேர்தலில் வென்று

தேவைப்பட்டதைச் சுருட்டி

தேசம்விட்டு நீட்டினார்      கம்பி.

0

20.  நடுநிசிநாய்கள்

நக்குத் தின்னும்         நாய்கள்

நக்கல் பின்னும்         வாய்கள்

நல்லவராய் நடித்து

நண்பரை நயவஞ்சிப்பர்

நரகலைத் தின்னும்      பேய்கள்..

0

21.  பெப்பே

கன்னிக்கும் சேர்த்தெடுத்தார்  டிக்கற்

காசென்று பாராமல்        பொக்கற்

கன்னி பக்கத்தமர்ந்து வரக்

கனவு..கடைசி நிமிடம்

காக்காவுடன் வந்தமர்ந்தாள்  பெப்பற்.

0

22.  தொலைகள்

தொலைபேசி அலுவலகத்தில்     அப்பா

தொலைக்காட்சி நாடகத்தில்     அம்மா

தொலைதூரத்தில் அண்ணா

தொலைநகல் காரனுடள்

தொலைந்து போனாள் மகள்     யம்மா.

0

23. ஓட்டோ

ரோட்டெல்லாம் ஓடுகின்ற      ஓட்டோ

ராமுழுக்கச் சத்தம்தான்       கேட்டோ

ரம்பமெனக் காதுகளில்

ரொம்பத்தான் அறுத்தாலும்

ரேட்டெல்லாம் குறைந்திடவே    மாட்டா..

0

24  சீனி-யர்

சீனி கொழுப்பு பிரசர்         கூட

சீனியப்பா கையில்ஊசி       போட

சீக்கிரமே போய்விட்டால்

சிறந்ததடா எனச் சொல்லி

சின்னவீடு சென்றார்          ஆட..

0

25  யுத்தம் நித்தம்

இறுதியாய் ஓய்ந்தது        யுத்தம்

இல்லை துப்பாக்கிச்        சத்தம்

இனிநிம்மதியே என்றெண்ண-

இந்நாட்டில் வாழ உமக்கு

இடமில்லை என்றார் தேரர்   பௌத்தம்.

0

26  ஆட்டா-டாட்டா

மகள் பள்ளிக்குச் செல்ல    ஆட்டா

மகள் ரியுசனுக்குப் போகவும் ஆட்டா

மாதமிரண்டு கழிந்திட

முச்சக்கரச் சாரதியுடன்

மகள் காட்டி மறைந்தாள்    டாட்டா..

0

27. மர்மப் புகழ்

இவ்விலக்கிய இதழ்தான்     சூப்பர்

இன்சொற் புகல்வார்        டாப்பர்

இதிலொரு விஷயம்

இவ்விதழில் இவர்கவிதை

இருக்கிறதே..அதுதான் பார்  பேப்பர்.

0

28.  ஊவ்..டகங்கள்

ஊடகங்களில்தான் எத்தனை  சேட்டை

உதவாக்கரை களின்புளுகு   மூட்டை

உன்னதமான கருத்தில்லை

உயர் நல் எண்ணமில்லை

உதவாது வீச வேண்டும்     சாட்டை

0

29. .... டிட்டர்

பெண்களின் கவிதைதான்    சுப்பர்

பெண்ணியல் கவிஞர் இந்த   மப்பர்

பத்திரிகையிற் போட்டுடன்

பஸ்ஏறித் தேடிப்;போய்

பல்லிளிக்கும் பேர்வழி     டிட்டர்.

0

30.  நூலானார்

புத்தகச்சுச்; செலவுஒரு       பக்கம்

பிரதியனுப்பிய தொகைமறு   பக்கம்

பிரதிகள் ஓசியில் போக

பிரட்டி எடுக்க வழியின்றிப்

போனது கைமோதிரம்       ரொக்கம்.                                                                  

 

31. தீ-ரன்

இக்குறும்பாக் களினரசன்     தீரன்

இருக்கின்றேன் சாய்ந்தமரு   தூரன்

இத்தொப்பி யார்க்கெல்லாம்

இணக்கமானால் அணிந்திடுக

இதற்குமேல் பேச்சில்லை     வாரன்.

 

32 .  கல்லா-பூஷணம்

கலை விருதுக்கு தெண்டித்தார்  மும்முறை

கலாபூஷன விருது பெற்றார்   இம்முறை

கலையறியா நீ பெற்றதெப்படி

காதோடு சொல் என்றேன்

காசுக்கு என்றார் இது கலை   வன்முறை  

 

33. தேசியப்பட்டியல்

ஒவ்வொரு ஊரும் இருக்குது அதையே நம்பி

ஒவ்வொரு உயர்பீடமும் தலைவருக்குக் கொம்பி

ஓடித் திரியுதுகள் ஓலமிடுதுகள்

உமக்குத்தான் என்று தலைவர்

உரையாற்றி முடிய  உறவினர் ஆயினார் எம்பி

0

34 , பிக்கு மக்கு

குர் ஆனைத் தடை செய்யணுமாம்   பிக்கு

கூறுகிறான் ஒன்றும் ஓதாத   மக்கு

குர் ஆனைப் பாதுகாப்பது

குவலயம் படைத்தோன் பொறுப்பு

கொள்ளாதே நீ எள்ளளவும்    சக்கு

0

35.குறுஞ்செய்-தீ

எஸ்எம்எஸ் அனுப்புகிறாள்    பாட்டி

எட்டிப் பார்த்தான் பேரன்     சூட்டி

எதிர்வீட்டுக் கிழவருக்காம்

எத்திவைத்தான் பாட்டனிடம்

எழுபது வயதில் மணவிலக்கு    நோட்டீஸ்.

0

36.ஏறுமலை

மண்ணாசை வெறுத்த புத்தர்

மானுடம் போதித்த சித்தர்

மாதவன் சொல்லவில்லை

மதவெறி பிடித்தவர்

மலையிலேற்றி வைத்தார் பித்தர்.

0

37.பல்லிமிட்டாய்.

பார்ப்பதற்கு பளபளக்கும் பல்லி முட்டை

போலிருக்கும் பலவர்ணம் பல்லி மிட்டாய்

பல்லிருப்போர்க்கு பரவசம் தரும்

பள்ளிக் காலம் நினைவில் வரும்

பள்ளித் தோழியுடன் பகிர்ந்துண்ட பல்லி முட்டாய்

0

38. கொத்து

டகர டகர டக்கு டக்குக் கொத்து

கொத்துறவன் பார் என்னா கெத்து

ஊத்த உடுப்பும் உப்பும்

வேர்த்த கையும் வெக்கையும்

சேர்த்துக்கொத்து தின்போம்மிகச் சத்து ?

0

39. புண்ணியப் பயணம்.

புரட்டிப் பணம் சேர்த்து   வெச்சு

புறப்பட்டார் புனிதமிகு    ஹஜ்ஜ-

பணமிருந்தால் ஹாஜியாராம்

பிணமானால் நேரே சொர்க்கமாம்

பத்துக்குமருடன்  பக்கத்து வீடோ  குச்சு.

0

40 பாடு-பட்டு.

கனடாவாழ் காதலருக்கும்    பாட்டு

கண்டறியா நேயருக்கும்     கேட்டு

கலகலவென கதைத்திருப்பார்

கலையுலக நண்பர்களாம்

காசுகரையுது கடனுக்கு ரீ   லோட்டு.

0

41 நடுநிசிநாய்கள்

நக்குத் தின்னும்         நாய்கள்

நக்கல் பின்னும்         வாய்கள்

நல்லவராய் நடித்து

நண்பரை நயவஞ்சிப்பர்

நரகலைத் தின்னும்      பேய்கள்..

0

42..கொள்ளி

,லக்சனில் குதிக்கின்றார் துள்ளி

,லட்சங்கள் வீசி வாக்குகள் அள்ளி

,னி-யார் காலிலும் விழுந்து

எம்பிக் குதித்து எம்பியாகி

,வர் வைப்பார் சமுகத்துக்குக் கொள்ளி.

0

43 .நல்லாட்சி

எந்தக் கட்சி ஏறிடும் பீடம் ஆட்சி

அந்தக்கட்சியில் மாறும் காட்சி

எக்கேடு கெட்டாலும்

எவர்தாலி அறுத்தாலும்

எம்பிஆவதே எங்களவர் மாட்சி

0

44. ஓவியம்.

எண்ணத்தில் தோய்த்தெடுத்தாள் தூரிகை

என்னையே வரைந்தாள் இக் காரிகை

எண்ணங்கள் இதயத்தில்

வண்ணங்கள் ஆகிடும்

என்னவள் என்றே கொட்டும் பேரிகை

0

45. எம்பி, எம்பி

காலியானது பதவி ஒன்று   எம்பி

கேள்விப்பட்ட நம்ம   தம்பி

கொடுப்புக்குள் சிரிக்கிறான்

கொழும்புக்கு ஓடுகிறான்

கிடைக்காவிட்டால்  அழுவான்   வெம்பி

0

46.  தலைவரின் கம்பி

தலைவர் பாதம் நக்குகிறான்    தும்பி

தனக்குத்தான் பதவி என     நம்பி

தொண்டருக்குத் தெரியாமல்

தலைவர் தனம் வாங்கி

தன் தம்பிக்கு பதவி இவனுக்கு    கம்பி

0

47.  சுய சரிதை

எத்தனையோ புத்தகங்கள்    போட்டார்

எழுத்தாளராம் சிரிக்கவே     மாட்டார்

என்கதை சுயசரிதை

எழுதி முடித்து  எழுந்த போது

எவன்கூடவோ மனைவி    போயிட்டாள்

0

48. புக்கப்-பேஸ்

பேஸ்புக்கில் வலம் வந்தான்      அப்பு

பதிவெல்லாம் பார்த்தால் ஒரே     மப்பு

பதில் கொடுத்தால் விளிக்கின்றான்

பதறுகிறான் ..முகத்தில்

பளாரென  அறைந்தால் என்ன     தப்பு ?

49. இப்தார்

ஆடம்பரமாய் நடக்குதுபல     இப்தார்

அத்தனைக்கும் போன நம்ம     சத்தார்

அடுக்கடுக்காய்ப் படம்பிடித்து

அத்தனையும் முகநூலில்

அடுத்தடுத்துப் பதிவேற்றிச்     செத்தார்.

49.  சந்தை  

தமிழினையே கொன்றிடுமவ்    விந்தை

தவறாது நடந்திடினும்    மந்தைத்

தமில்வாசகப் பெருமக்கள்

தவழ்கின்ற இடந்தானே

தமிழகத்துப் பத்திரிகைச்    சந்தை

0

50. பாலமுனை பாறூக்

பாலமுனை பாறுக்கெனும்     பேரன்

பால்ய முதல்  கவிதைகளில்    வீரன்

படைத்திட்டான் பதமென்றே

பசும் கவிதைத் தொகுப்பொன்றே

படித்தின்புற வாங்கித்தான்    பாரேன்

0

51. சுலைமா  சமி

கோலெடுத்தாள் தர்ஹா டவுன்     கண்ணாள்

கோலமிட்டன எழுத்துக்கள்      அந்நாள்

கோர்த்தெடுத்தாள்  கருப்பூக்கள்

கோர்த்தது  வைகறைப்   பூக்கள்

கொங்க்ராட்லேசன்ஸ் சுலைமா சமிப்    பெண்ணாள்  

0

52. நூறுல்ஹக்

நூறுல்ஹக் பேர் சொன்னால்     எங்கும்

நண்பர் தம் நினைவினிலே     தங்கும்

நங்கை கமர் ஜானுடனே

நிறைமணவறை கண்டிவனே

நீடூழிவாழ்  மகிழ்வது        பொங்கும்

0

53. அன்புடீன்

அம்மென்றால் ஆயியம் கவி     கொட்டும்

அத்தனையும் நெஞ்சில்  தேன்  சொட்டும்

அன்புடீன்  தொகுதியொன்று

அதன் நாமம் முகங்கள் என்று

அது சொல்லும் அவன் பேர் திக்     கெட்டும்

0

54. தனபாலசிங்கம்

தனபால சிங்கத்தின்     பேர்

தமிழ்கூறும் நல்லுலகில்     ஓர்

தடம் பதிக்கும்

துவி மாதக் கவியேட்டைத்

தவறாது நடத்துகிறார்     பார்.

0

 

 

 

௦௦௦

கடும் குறும்பாக சில

நெடும் குறும்பாக்கள்

 

 

தேர்தல்  வருகுது

 

இலக்சனில் குதிக்கின்றார்    துள்ளி

இலட்சங்கள் வ்வேசி வாக்குகள்   அள்ளி

இனி- யார் காலிலும் விழுந்து

எம்பிக் குதித்து  எம்பியாகி

இவர் வைப்பார்  சமுகத்துக்கு    கொள்ளி

 

நம்பிய மக்களை நட்டாற்றில்    விட்டு

நீளம் பச்சையிலும் மூக்குடை    பட்டு

நாளொரு கூட்டு  நாற்காலி மாற்றி

நரி வேஷம் போட்டு  நம்மை நாடி

நகை வதனம் காட்டிக் கேட்கின்றார்     வோட்டு

 

எந்தக் கட்சி ஏறிடும் பீடம்     ஆட்சி

அந்தக் கட்சியில் மாறிடும்     காட்சி

எக்கேடு கேட்டாலும்

எவர் தாலி அறுத்தாலும்

எம்பி ஆவதே எங்களவர்     மாட்சி

 

சூடு சுரணை ஏதுமிவர்க்    கில்லை

சூது வாத்து சுருட்டலிலும்    எல்லை

சூட்டுக் கோலுக்கும்  வருந்தாத

சூடு போட்டாலும்  திருந்தாத

சூரர்களால்  நமக்கு மிகத்    தொல்லை

 

முஸ்லிம் சமுக உரிமைக்காக      ஆர்த்து

முழங்கிப் பின் மூலைக்குள்     போர்த்து

முட்டாளாக்கிய மட்டிகளுக்கு

முட்டாள்  தினத்துக்கு மறுநாள்

மக்கள் அளிப்பார் கட்டாயாமொரு    தீர்ப்பு

 

௦௦௦

எப்.எம். கொலைவரிசை

 

ஹெல்லோ நான்தான் சூப்பர்    எப்எம்

ஹல்லோவ் உங்கள் குரலோ    செப்பம்

ஹீஹீஹீ நலமாண்ணா..?

ஹாய்.. சாப்பிட்டீங்களாம்மா..

ஹீ..ஹீ..அடிச்சேன்ணா ரெண்டு   அப்பம்.

 

யுார்யாக்கெல்லாம் வேணும் பாட்டு

யுாரெல்லாம் இருக்கிறீங்க கேட்டு

யாபேரின் பெயர்சொல்லி

யார்க்கணக்கில் வெறுப்பேற்றி

யுரோவில் கரையுது ரீலோட்டு

 

சேர் உங்க குரல் நம்பர் வண்ணு

சீ..ய்..புகழ்ந்தால் பட்டுவிடும்கண்ணு

செல்லமாய்ச் சிணுங்காதீங்கோ

சிரிக்காதீங்கோ கணவர்

செவியில் விழுந்தால் வாயில் மண்ணு

 

எஸ்.பிபி. பாட்டொன்று கேட்டன்

ஏஆர்ரஹ்மான் மியுசிக் போட்டேன்.

ஏன்குரலா அவர்குரலா

எவரதுமக் குப்பிடிக்கும்

ஏய்..சீய்.. அதை நான் சொல்ல மாட்டேன்.

 

ஊடகத்தில்தானித்தனை சேட்டை

உதவாது விளாசவேண்டும் சாட்டை

உன்னதமாம் கருத்துக்கள்

உயிர்உருகும் .இசைபற்றி

உறவாடிப்பகிர்ந்திடுவோம் பாட்டை..

(தினகரன் – வாரமஞ்சரி -5 .2.2012 )

 

 

 

தூது  கவியிதழின் ஆசிரியர் தலையங்கங்கள்

 

புதிய  பிரசவங்கள்

 

பாரினையே னக்கலவரம் மூடும்

பத்திரிகைச் சுதந்திரங்கள் ஓடும்

புதுப்புரட்சிக் கருத்துக்களையே

பிரசவிக்க மிகத் தடைகளும்

படைப்போர் மனங்களிலே ஆடும்.

 

புதுப்புதுவாய்ப் பிரசவிக்க ஆசை

பொங்கிடினும் புரட்டுவதோ தோசை

பேனாக்கள் தூங்கிப் போய்

பிடிப்போரும் ஏங்கிப் போய்

பிரசவங்களின் நலம் காண ஆசை

 

தமை மிஞ்சிய கவிஞரே     இல்லை

தாமே தமிழிலக்கியத்தின்    எல்லை

தலை கனத்து திரிபவரோ

தருவது தரமற்ற குப்பை 

திண்ணமிது நம் வெறுப்பின்     எல்லை

 

ப்போதான் எழுதுகிற பிள்ளை

லக்கியத்தில் வளருகிற கிள்ளை

இடிபோல எழுத்துக்கள்

னிய புதுக்கருத்துக்கள்

ருந்துமென்ன ,றுக்கம் தானில்லை

 

அழியாவிலக்கியங்கள்தான் தேவை

அருந்தமிழுக்காற்றும் நற் சேவை

ஆக்கவிலக்கியக்காரரர்

அகிலப்புகழ் பெற்றுயர

அரைக்கக் கூடாதரைத்த மாவை.

(தூது- 8 -1985  ஜூலை )

௦௦௦௦

 

தீராதா யுத்தம்

 

தினந்தோறும் துப்பாக்கிச் சத்தம்

தீநரகில் மானுடங்கள் தத்தம்

தீய்ந்துவிடும் உயிருடமை

திரும்பாதா சமாதானம்

தீராதா உளநாட்டு யுத்தம்?

 

ஓற்றுமையாயப் பேச்சொலிக்கும் காலை

ஒருகுண்டு வெடித்திடுமோர் மூலை

ஒப்பமிட்டோர் ஓடியொழிய

ஒருகணத்தில் குழம்பிவிடும்

ஓலமிட்டழும் மனமெல்லாம் பாலை

 

புதிதாயொரு  புரட்சி துளிர்விட்டு

புத்துவருகிறது  புதுப் பெயரிட்டு

புல்புல்கள் வான்மேவி

பரல்நெருப்பு நாகாவி

போராடத் தாம்வரும் புறப் பட்டு

 

நிம்மதியாய் வாழத்தான் ஆசை

நீதியிப்போ என்னவிலை வீசை

நேர்மைகள் செத்துப்போய்

நம்பிக்கை அற்றுப் போய்

நிலைக்காதா ஐக்கியமணி ஓசை..?

 

எவ்வினத்திலும் ஒற்றுமைச் சேர்வு

ஏற்படவேண்டுமொரு புதுத் தீர்வு

ஏட்டிலக்கியம் செழித்திடவும்

எக்கலையும் வளர்ந்திடவும்

எழுதிடல் வேண்டும் ஐக்கியத் தேர்வு

 

நிச்சயமாக புலரும் புதுக் காலை

நற்கவிமழை பொழிந்திடவெடு கோலை

நாளைய யுகவிடியல்

நமதென்றே கோஸித்து

நீட்டிடுவோம் எழுதியொரு ஓலை.

 

துப்பாக்கியைப் பேனாவாய் மாற்று

ஓற்றுமையை அதற்குள்ளே ஊற்று

துர்ப்பாக்கியம் ஒழிந்தோட

தூயதமிழ்க் கவிதையெழுதி

தூது வரும் என்றுலகில் சாற்று

(தூது-இதழ்-10.- 1986  ஜூன் )

௦௦௦

 

வாழும்போதே வாழ்த்துக...

 

இலக்கியங்கள் தரச் சிறப்பாய்    உண்டு

இயற்றித் தந்தோரை இனம்     கண்டு

இவ்வுலகில் வாழ்கையில்

இல்லையொரு கவுரவமென

இதயத்தில் ஏக்கம்பல     உண்டு

 

இலக்கியத்தில் புரிந்த நற்      சேவை

இருக்கையில் புகல்வதொன்றே    தேவை

இருக்கையில் மறந்தே போய்

இறந்தபின்னே புகழ்வோரது

 இழுத்துப் பிடுங்கல் வேண்டும் அவர்    நாவை

 

வாழ்கையில் கவுரவிக்கும்     தன்மை

வேண்டுமெனக் கத்துகிறோம்   உண்மை

வாழ்கையில்  கைவிட்டு

வாழ்ந்தபின்  சிலை வைத்தே

வணங்குதலை எதிர்த்திடுவோம்    வன்மை

 

வாழும்போதே வாழ்த்துவதே     நன்மை

வேண்டுமெனச் சொல்லுகிறோம்  உண்மை

வாழ்கையில் மறந்துவிட்டு

வாழ்ந்தபின்னே சிலை வைத்தே

வணங்குதலை எதிர்த்திடுவோம்  வன்மை.

 

இசுலாமியக் கலைஞர்கள்    இங்கு

இன்தமிழுக்குப் புரிந்த உயர்    பங்கு

இருக்கிறதே   ஏராளம்

இவர் கவுரவம் பெற

இருக்கிறதா  அமைப்பொன்று     எங்கு?

 

அமைச்சுக்கள் பாவம் என்ன    செய்யும்

அடைத்துப் போய் பேனாவின்     மையும்

அதிகாரமும்   அற்றுப் போய்

ஆடுகின்றன  பம்பரமாய்

அடுத்த புதிய சந்ததிகள்     வையும்

 

இசுலாமிய இலக்கியப் பனி    ஆற்றும்

இதயங்களைக் கண்டெடுத்துப்     போற்று

இதற்கெனவே  ஓரமைப்பு

இலையாயின்  எம்பேனா

இதயத்தைக்  கிழித்திடு மெனச்    சாற்று

௦௦௦

(தூது - இதழ் 11 & 12 –ஜனவரி /ஏப்ரல்  1987)  

 

௦௦௦௦

ஒப்பந்தம்

 

எங்கும் சமாதானமென்றே   பேச்சு

எல்லோரிடத்தும் நிம்மதிப் பெரு    மூச்சு

எந்நாளும் நிலைத்து நிற்க

ஏற்றதுவாய் தீர்வொன்று

எடுத்தெழுதிக்  கையொப்ப     மாச்சு

 

இருட்டினிலே வாழ்ந்திருந்தார்      இங்கு

இருந்ததுவா நீதிமண்ணில்      எங்கு?

இயக்கங்கள் படைத்து விட்டார்

இலக்குடனே  மோதி வந்தார்

ஈழம் வந்ததா நாட்டில்     பங்கு?

 

வீதியிலே தடைகளினியும்    இல்லை

விரண்டோடும் பயமதுவும்     இல்லை

வழிபிறந்தது , பிரபாகரன்

வாழியவே எனக் கோஷித்து

வாகனங்களின் ஊர்வலங்கள்    கொள்ளை

 

ராவணவன்  அரசாண்டான்        அன்று

ராமன்தான் புகுந்து விட்டான்     வென்று

ரிச்சர்ட்டு  ஆட்சிதனில்

ராஜீவவர் புகுந்து விட்டார்

இரத்தினபுரிக்  கிக்கதிதான்     என்றும்

 

இலங்கேஸ்வரன்  ஆண்டாள்தான்     என்ன

இந்துஸ்தான்  ஆண்டாள்தான்    என்ன

இசுலாமியர் நலம் காத்திட

இல்லை எத் தீர்வொன்றும்

ஈமானே  உன்கதிதா     னென்ன

 

இஸ்லாமியர் நலம் கருதும்    சேவை

இப்போதே அவசியமாய்ச்    தேவை

இல்லையேல் ஒருமித்தே

இன்னல்கள் விரட்டிடவே

இன்னோர் ஜிகாத் புறப்படத்     தேவை

௦௦௦

(தூது .இதழ்- 13...  ஜூலை/ஒக்டோபர். 1987)  

௦௦௦௦

மீண்டும் யுத்தம்  

 

வட-கிழக்கில் நாள்தோறும் குண்டு

விழுமுயிர்க்கு ஒரு கணக்கா உண்டு

விடுதலைப் புலி சுடும் வேட்டை

விழுங்கிவிடும் நாட்டை

வெளியேறுமா அமைதிப்படை என்று..?

 

தென்திசையிலும்  துப்பாக்கி வேட்டு

திணறாதா மானுடமது கேட்டு?

திசையெல்லாம் ரத்தம் பார்

திரும்புமிடம் சத்தம் வீர்.

துட்டகைமுனுக்கும் உரிமைப் பாட்டு

 

புதிதாயொரு  புரட்சி துளிர்    விட்டு

பூத்து வருகிறது புதுப் பெய     ரிட்டு

புல்புல்கள்  வான்மேவி

பரல் நெருப்பு நா காவி

போராடத் தாம் வரும்  புறப்    பட்டு  

 

மனிதர் சகலருமறிக    இத்தால்

மாதத்தில்  நாலைந்து     ஹர்த்தால்

மண்சமரில் இறந்தாலே

மறு யுகமது பிறந்தாலே

மண்ணில் இல்லை மானுடம் போர்ப்  பித்தால்

 

பல்கலைக்கழக மெல்லாம்    பூட்டு

பள்ளியிலும் கிழிக்கப்படும்     நோட்டு

படிக்க வந்த பிள்ளைகளின்

பதறும் உயிர் இல்லையெனின்

படிப்பெதற்கு ஊன்றுக  கை     நாட்டு

 

அழுகின்ற  அகதிக் குரல்    கேட்டு

அடைத்து விடு காதில் விரல்    ஓட்டு

அடுத்துவரும் இலக்சனில் குதி

அடுக்கிவிடு கலக்சனில்  சுதி

ஆலாப் பற பார்லிமேந்துச்      சீட்டு

 

அரசாங்க  ஊழியர் ஆர்ப்    பாட்டம்

அரசாங்க நிர்வாகமும்    மூட்டம்

அரசாங்கம்  கலையாது

அதிகாரம்  நிலையாது

அழியாதா  அக்கிரமக்   கூட்டம் ?

 

பாராளும்  மந்திரிகள்      சேர்ந்து

பாராளும் உரிமைகள்     தேர்ந்து

 போராடும் இனத்துக்கும்

பாராளும் வகை செய்யின்

பார்..ஓடும் பிரச்சினைகள்    தீர்ந்து

௦௦௦

(தூது..இதழ்  15 - அக்டோபர் 1988)